Share via:
பாட்டாளி மக்கள் கட்சியில் இனி எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிட்டது
என்பது போன்று டாக்டர் ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக அடக்கி வாசித்தார். இந்த நிலையில்,
திடீரென அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலுவை கட்டம் கட்டி அன்புமணி டீமை கதற
விட்டுள்ளார்.
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே
இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. சமரசத்துக்கு ராமதாஸை
அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக
முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, சென்னையில்
உள்ள மகள் வீட்டில் 3 நாட்களாக ராமதாஸ் முகாமிட்டிருந்தார்.
சென்னையில் மேற்கொண்ட சமரச முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில்
நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு திரும்பிய ராமதாஸ், வழக்கமான
அதிரடி நடவடிக்கையை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.
அன்புமணியின் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் திலகபாமா உட்பட 45 மாவட்ட
நிர்வாகிகளை ஏற்கெனவே ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கியிருந்தார். அதே பாணியில் சென்னையில்
அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர்
கே.பாலுவை, பதவியில் இருந்து ராமதாஸ் நேற்று நீக்கியுள்ளார். அவருக்கு மாற்றாக வழக்கறிஞர்
கோபு என்பவரை நியமித்துள்ளார். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும்
செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை நியமனம் செய்துள்ளார்.
ராமதாஸ் பேரைச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் பாலுவின்
தூண்டுதலில் அன்புமணி ரொம்பவே ஆட்டம் போடுவதாக புகார் எழுந்ததையொட்டி அவருக்கு கட்டம்
கட்டப்பட்டுள்ளது. அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்தாலும் பாலு, திலகபாமா உள்ளே நுழையவே
முடியாது என்கிறார்கள். ஆட்டம் சூடு பிடிக்கிறது.