Share via:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்று (டிச.12) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், முதலில் தனது வாழ்க்கையை ஒரு பேருந்து நடத்துனராக ஆரம்பித்து பின்னர், சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது மறைந்த இயக்குனர் இமயம் பாலச்சந்தர்தான். ரஜினிகாந்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை முதன்முதலாக அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் என மொத்தம் 6 மொழிகளில் ரஜினிகாந்த் இதுவரை 169 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சினிமாத்துறையில் ரஜினிகாந்த் பத்மபூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சினிமா துறையில் ரஜினிகாந்தின் பங்களிப்பை பாராட்டும் வகையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த 2019ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரைப்பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை இணையதளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அதனுடன் சேர்த்து தற்போது ரஜினிகாந்த்தின், தலைவர்170, தலைவர் 171 உள்ளிட்ட ஹேஷ்டேக்கள் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள், பல்வேறு இடங்களில் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை இன்னும் சிறப்பாக கொண்டாடிட தலைவர் 170 படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தலைவர் 170 படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.