Share via:
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் கடந்த 3 மற்றும் 4ம் தேதி கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அனைத்தையும் நாசப்படுத்தியது. மேலும் பல இடங்களில் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் உணவு, குடிநீர், மின்சாரமின்றி தவித்தனர்.
மழைநீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததால்தான் மழைநீர் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்தது என்ற விமர்சனமும் எழுந்தது. மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே மேடையில் பதில் சொல்லத் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நேற்று (டிச.10) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘ கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேரு, 98 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 42 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே மழைநீர் வடிகால் பணிகள் செய்தார்களா? இல்லையா என்பது குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்தால் மட்டுமே உண்மை வெளி வரும் என்று தெரிவித்தார்.
மேலும் டோக்கன் கொடுப்பது காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். அதோடு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.