Share via:
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று
அமலாக்கத்துறை சோதனை நடத்திய இலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட
12 இடங்களில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன், அவரை ஏன் சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை..?
இவர் கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்துவின் பேத்தி தாரிணியின்
கணவர். அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பர். உதயநிதியின் நம்பிக்கைக்கு உரியவர்.
இவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ள கவிஞர் பாரதிதாசன் சாலையில் உள்ளது. தமிழ் சினிமாவில்
பழம் தின்று கொட்டை போட்ட ப்ரொடக்ஷன் கம்பெனிகள் படம் தயாரிக்கத் தடுமாறும் நிலையில்
இவர் ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரித்து வருகிறார்.
டான் (Dawn Pictures) பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பது
எல்லாமே மிகப்பெரிய பிராஜெக்ட். தனுஷ் இயக்கி நடிக்கும் “இட்லி கடை” படம்
தான் இவர்களின் முதல் தயாரிப்பு. அந்தப் படம் ரிலீஸிற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன்,
ரவி, அதர்வா நடிக்கும் “பராசக்தி” படம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதர்வா
நடிப்பில் வெளியாகவிருக்கும் “இதயம் முரளி” படமும் டான் பிக்சர்ஸ் தான்.
இது போக சிம்புவின் 49வது படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரிக்கிறது.
ஆகாஷ் பாஸ்கரனுக்கு 30 வயது இருந்தாலே அதிகம் தான். சேலம் பி ஆர்
ஆர் ஸ்வர்ணமாளிகை நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கரனின் மகன் தான் ஆகாஷ். பாஸ்கரன்
நகைக்கடை மட்டும் அல்லாமல் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். ஆகாஷின் திருமணத்தில்
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழக
முதல்வரும் அவர் மனைவி துர்கா அவர்களும் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக நடக்கும் அமலாக்கத்துறை
சோதனையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு
ஆதாரங்கள் சிக்கும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.