Share via:
வரும் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்டமன்றத்
தேர்தலுக்கு கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக இருக்கும் நிலையில்,
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்கள் மீது நடந்திருக்கும் அமலாக்கத்துறை
ரெய்டு பரபரப்பாகியிருக்கிறது. இவர் தான் சமீபத்தில் நயினார் நாகேந்திரனை சந்தித்துப்
பேசி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை
சேர்ந்தமுருகானந்தம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜ பொருளாளராக இருக்கிறார். இவரது
அண்ணன் ரவிசந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வருகிறார்,
தம்பி பழனிவேல் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார்..
முருகானந்தமும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக
முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப்பணித்துறை
ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான இவர்கள்
மீது கடந்த 2022ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீடுகளில் சோதனை
நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக தெரியவந்ததை
தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து
கேட்டுப்பெற்றது.
அதனடிப்படையில் மதுரை, சென்னையிலிருந்து அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை
சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டுக்கு வந்தனர். காலை 7 மணிக்கு தொடக்கிய சோதனை
மாலை 6.10 மணிக்கு முடிந்தது. சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் இரண்டு பைகளில்
கட்டு, கட்டாக ஆவணங்கள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து
சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், கருக்காகுறிச்சியில் உள்ள ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளிலும்
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பழனிவேலின் நண்பரான ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள
மற்றொரு பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியுடன்
முருகானந்தத்திற்கு தொடர்பு ஏற்பட்டு, அவர் மூலமாக அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்து
வந்ததாக தெரிகிறது. இதனை வைத்து முருகானந்தம் தன் தம்பி பழனிவேலுக்கு பல நூறு கோடி
அளவில் உள்ளாட்சிதுறையில் காண்ட்ராக்ட் பெற்று கொடுத்துள்ளார். அதன்பிறகு இவர்களது
சொத்துமதிப்பு 1,260 மடங்கு உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ரெய்டு வேலுமணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே
சொல்லப்படுகிறது. வரும் பொதுக்குழுவில் பா.ஜ.க. கூட்டணிக்கு குரல் கொடுக்க வேண்டும்
என்பதற்காக நடந்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். வேலுமணி என்ன செய்வார்
என்று பார்க்கலாம்.