Share via:
டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன்
களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில்
ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி
கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும்
குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ்
கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, குஜராத், பஞ்சாப் மற்றும்
ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து நின்று காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அவர்களுக்கு
இந்தத் தேர்தலில் நாங்கள் பாடம் புகட்டியுள்ளோம். இனி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியும்
பா.ஜ.க.வும் நேரடியாக மோதும். ஆம் ஆத்மிக்கு இனி அவசியம் இல்லை’’ என்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்கிறது என்று கூறிய ஆம் ஆத்மியின்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போனார். அதோடு, அவரது
அமைச்சர்களும் சிறைக்குப் போனார்கள். பலரும் பா.ஜ.க.விடம் சரண்டர் ஆனார்கள். ஊழலுக்கு
எதிராகத் தொடங்கப்பட்ட கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்பதை பா.ஜ.க. ஆணித்தரமாக அடித்துச்
சொன்னது. இதை மக்களும் நம்பி பா.ஜ.க.வுக்கு வாக்களித்தார்கள். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி
தனித்து நின்று ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு
முக்கியத்துவம் கொடுக்க முன்வரவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சி இந்த போட்டியை வேடிக்கைப்
பார்த்தது என்றே சொல்ல வேண்டும்.
இப்போது வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி
பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி சுமார் 48 தொகுதிகளில் பாஜக முன்னிலையில்
உள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெறும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
அது மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள், கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் பின்தங்கியுள்ளனர். ஆகவே பாஜக
27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடிக்க உள்ளது. டெல்லியில் 40 முதல் 45
இடங்களை கைப்பற்றி தலைநகரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
கிட்டத்தட்ட சரியாகும் தருணத்தில் இருக்கிறது.
இண்டியா கூட்டணியில் ஒற்றுமைக்கு சரியான வழி தேட வேண்டிய நேரம்
இது.