Share via:
அதானி விவகாரம் என்றாலே ராகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிப்பானது.
இப்போது, அவருக்கு வசமாகச் சிக்கியிருக்கிறது ஹிண்டர்பர்க் அறிக்கை. அதானி பணப் பரிமாற்ற
ஊழலில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதாபி பல்லாயிரக்கணக்கான
கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது.
மேலும், “அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி
தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை’’ என்றும் கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் நாடு முழுக்க புயல் எழுப்பியிருக்கும் நிலையில்,
பா.ஜ.க.வினர் மட்டும் வழக்கம்போல் போலிக் குற்றச்சாட்டு என்று கூறிவருகிறார்கள். அதோடு
செபியின் தலைவர் மீது விசாரணை எதுவும் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.
பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கும்
நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘’இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்
இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர்
சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும்
தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக
இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான்
இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது
செபி தலைவர் மாதாபி ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள்
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி
தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச
நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?
சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள
செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும்,
அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என்று ராகுல்
குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த நிலையில்ம் ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை
ஆதாரம் அற்றவை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி
குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
ராகுலுக்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித்
மாள்வியா, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
இப்போது வெளிப்படையாகவே இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பி அதன்
நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். நமது பொருளாதாரத்தின் மீதான நன்நம்பிக்கையை
குறைத்து மதிப்பிடும் இந்த அப்பட்டமான முயற்சி ராகுல் காந்தியின் எண்ணம் என்னவென்பதை
வெளிப்படையாகக் காட்டுகிறது. அவரது எண்ணம் இந்தியாவை சிதைப்பதைத் தவிர வேறில்லை என்பது
இதன்மூலம் புலப்படுகிறது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சந்தேகம்னு வந்துட்டா முதல்ல பதவி விலகச் சொல்லுங்கப்பா.