News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

400 தொகுதிகளை வெல்வோம் என்று வீரவசனம் பேசிய பாஜக, தனிப்பெரும்பான்மை பெறவே முடியாத அளவுக்குத் தடுமாறியது. இந்த வெற்றியும் உண்மை அல்ல, அப்பட்டமான சீட்டிங் என்று ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஐந்து விதமான பாஜக சீட்டிங் குறித்து விலாவாரியாகப் பேசினார். அவர் பேசுகையில், “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். தேர்தலில் சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் துல்லியமானதா என்பதை பார்க்க வேண்டும். சில காலமாக, சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஜனநாயகத்திலும், ஒவ்வொரு அரசியல் கட்சியையும் தாக்கும் ஒன்றுதான் ஆட்சிக்கு எதிரான நிலை. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஜனநாயகக் கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான போக்கால் பாதிக்கப்படாத ஒரே கட்சியாக பாஜக மட்டும்தான் தெரிகிறது.

கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவை அந்த ஐந்து வகை.

நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும். இது சவாலானதும் கூட.

எங்களிடம் உள்ள லட்சக்கணக்கான ஆவணக் காகிதத்தை அடுக்கி வைத்தபோது அது 7 அடி உயரம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்த வேண்டியிருந்தது. யாராவது இரண்டு முறை வாக்களித்திருக்கிறார்களா அல்லது வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இரண்டு முறை வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நான் விரும்பினேன் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தாளிலும் உள்ள ஒவ்வொரு புகைப்படத்துடனும் அவர்களின் படத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுதான் செயல்முறை. இது மிகவும் கடினமானது.

இதை நாங்கள் எதிர்கொண்டபோது, தேர்தல் ஆணையம் ஏன் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கவில்லை என்பதை உணர்ந்தோம். அவர்கள் அதை கவனமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. இந்தப் பணி எங்களுக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. 30-40 பேர் இடைவிடாமல் வேலை செய்து, பெயர்கள், முகவரிகள் மற்றும் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். மேலும் இது ஒரு தொகுதிக்கு மட்டுமே.

தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கியிருந்தால், அதற்கான நேரம் வெறும் 30 விநாடிகள் மட்டுமே இருந்திருக்கும். அதனால்தான் இந்த வடிவத்தில் எங்களுக்கு தரவு வழங்கப்படுகிறது. அதனால் அது பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆவணங்கள் மின்னணு கேரக்டர் அங்கீகாரத்தை அனுமதிக்காது; நீங்கள் அவற்றை ஸ்கேன் செய்தால், நீங்கள் தரவைப் பிரித்தெடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது. இது எங்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது.

மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘0’ என்று இருக்கிறது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் ஆகும். நான் அரசியல்வாதி. நான் மக்களிடம் பேசுகிறேன். இதை எனது உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

இந்நிலையில் ராகுல்காந்தி கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருக்கிறது. இது, அவரது வாயை அடக்கும் முயற்சி என்றே கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link