Share via:
ராகிங் கொடுமை காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் தார்பூர் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 18 வயதான அனில் மெதானியா என்ற மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் அனில் மெதானியாவை அதே கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த 3ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி 3 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கும்படி அனில் மெதானியாவை 3 ஆண்டு மாணவர்கள் கூறிய நிலையில், அப்படியே நின்று கொண்டிருந்த அனில் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார்.
அனில் மெதானியாவை மீட்ட சகமாணவர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்திய போது அவர், தன்னை 3ம் ஆண்டு மாணவர்கள் சிலர், 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.
மாணவர் போலீசாரிடம் தெரிவித்த நிலையில் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த அனில் மெதானியாவை ராகிங் செய்த மாணவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தாக்கமாக கல்வி வளாகங்கள் மற்றும் அதன் தொடர்புடைய மையங்களில் எந்தவிதமான ராகிங்கும் நடக்கக் கூடாது என அதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. மேலும் ராகிங்கில் ஈடுபடுபவர்கள் மீதும் அதனை தூண்டிவிடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுகு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.