Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/Gid5OWrb0AAeqky-1024x721.jpg)
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு
உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்
முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆனால்,ஆளுர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற
நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’காரணம் எதுவும் தெரிவிக்காமல்
மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு
தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி
வைத்தால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள்; அப்படியெனில் செல்லாத மசோதாவை
குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும்?
ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மசோதாவை நிறுத்தி வைக்கிறேன்
என்ற முடிவை எடுத்துவிட்டு பிறகு அதை ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதற்கு
பதில் சொன்னால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று கேட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார்கள்.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனத் திருத்த மசோதா
உட்பட தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு
ஒப்புதல் தராமல் முரண்டு பிடித்து வருகிறார் ஆளுநர் ரவி. 2020 –23 காலக்கட்டத்தில்
14 மசோதாக்கள் தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில்
2 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டு, 12 மசோதாக்களை மாநில
அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் ஆளுநர் ரவி. இந்த மசோதாக்களை சட்டமன்றத்தில்
மீண்டும் நிறைவேற்றி மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாவது முறையும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும். உடனே ஆளுநர், அந்த
12 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். அங்கு கிடப்பில்
கிடக்கிறது. இது மாநில அரசை, பல்கலைக் கழகங்களை முடக்கும் செயல் ஆகும்.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்
அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்
மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைப்பதற்கான காரணம் என்ன?
இரண்டு மசோதாக்களை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள்
மீது முடிவு எடுக்க மறுத்ததற்கான காரணம் என்ன? அரசு மறுபடியும் மசோதாக்களை
நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா? இவ்வளவு
காலமாக ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை? மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல்
ஆளுநர் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி? அரசியல் சாசனம்
200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? என்று முதல் நாள் விசாரணையில்
சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதோடு மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்தால்
அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் மாநில அரசுக்கு எப்படி
தெரியும்? மசோதாக்கள் மீது முடிவு எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து
என்ன நடவடிக்கை? மசோதாவை நிறுத்தி வைப்பது குறித்து அரசியல் சாசனம் 200 ஆவது
பிரிவு எதையும் கூறவில்லை. அப்படியானால் அடுத்த நிலை என்ன? பல்கலைக்கழக மசோதா
ஒன்றிய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன?
மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? மசோதாக்களை
கிடப்பில் போட்டு, மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. மசோதாவை
குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது குறிப்பு ஏதும் இல்லாமல் அனுப்புவது
ஏன்? நாட்டின் குடியரசுத் தலைவர், அவராகவே ஆளுநரிடம் கேட்டு தெரிந்து கொள்வாரா?
தமிழ்நாடு அரசின் மசோதா விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எப்போது முடிவை
அறிவிப்பார்? இப்படி சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மசோதாவை
நிராகரிக்க ஆளுநர் காரணம் தெரிவிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இதையொட்டி இன்றும் உச்சநீதிமன்றம் கேள்வி மேல் கேட்டு வருகிறது.
அதேநேரம், மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருவதற்கு
வாய்ப்பு இல்லை என்றே சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். தி.மு.க.வுக்கு நீதி கிடைக்குமா
என்று பார்க்கலாம்.