Share via:
கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று (நவ.21) மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தும், ஆலோசனைகளையும் கூறியுள்ளதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘‘சிறுபான்மையினர் நம்மை தேடி ஆதரவு தெரிவித்து வருவதால் தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரை கவரும் வகையில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படியும், கட்சியிலும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க.வுடன் நாம் உறவை முறித்துக் கொண்டதை தி.மு.க. சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறுமாறு மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகவும், வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக அவர் தெரிவித்தார்.
கட்சிக்கு எப்போதும் நேர்மையாக இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயர்வு ஏற்படும். அதே சமயம துரோகம் செய்பவர்களின் செயல்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களால் அ.தி.மு.க. கரை வேட்டியை கூட கட்டமுடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.