Share via:
சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்களில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதனால் சென்னையில் ஆங்காங்கே பல்வேறு தனியார் விடுதிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தாரத் ஜகடே புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2004 மற்றும் வ திகள் 2015ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை பதிவு செய்யப்படாத விடுதிகள் உடனடியாக பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதளம் மூலம் வருகிற அக்டோபர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவு செய்பவர்கள் அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம் அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரத்துறை ஆகிய ஆவணங்களையும் பதிவு செய்யும் போது உடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகங்கள் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.