Share via:
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 10ம் தேதி வயநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 30ம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினன் மேற்கொண்டுவரும் மீட்புப்பணிகள் பலர் சடலமாகவும் சிலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி பலி எண்ணிக்கை தற்போது 400ஐ கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 152 பேரை காணவில்லை என்று கூறப்படும் நிலையில், அவர்களும் இறந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (ஆகஸ்டு 10) பார்வையிடுகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர், கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தை அடைந்ததும், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அவரை வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுகிறார்.
அதைத்தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கேரள மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநில எல்லைப் பகுதிகளிலும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னரே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டு மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தொடர் கோரிக்கை வைத்து வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.