Share via:
நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சஸ்பெண்ட்
செய்து வெளியே அனுப்பிவிட்டு, பா.ஜ.க. கொண்டுவந்த கொடூரமான கிரிமினல் சட்டங்களுக்கு
ஜனாதிபதி திருவுபதி முர்மு அவசரமாக ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்
கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்
(1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்
(1872) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா
மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற
மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியது குறித்து விசாரணை நடைபெற
வேண்டுமென கோரிய ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் வெளியேற்றப்பட்டனர் இந்த
நிலையில் நிலைக்குழுவின் சில பரிந்துரையுடன் திருத்தி அமைக்கப்பட்ட 3 புதிய குற்றவியல்
மசோதாக்களையும் மக்களவை மற்றும் மாநிலங்களவையும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், முக்கியமான இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கும்
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அவையில்
இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட 4 நாட்களிலேயே ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது
பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான
விதிகள் முந்தைய சட்டங்களை போல ஒரே மாதிரியாக இருந்தாலும், சில முக்கிய மாற்றங்களும்
செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை போலீஸ் காவலில்
வைக்க முடியும். ஆனால் இப்போது குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 60 அல்லது
90 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்கமுடியும். ஆதாரங்களைப் பதிவு செய்தல், அனைத்து
விசாரணைகளை ஆன்லைன் மூலம் நடத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்துவது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.
இந்த சட்டத்தில், தேச பாதுகாப்பு நலன் கரதி தொலைதொடர்பு சேவைகளை தற்காலிகமாக அரசு கையகப்படுத்த
வழி வகை உண்டு. மோசடியாக சிம் கார்டுகளை வாங்கினால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 லட்சம்
வரை அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் விளம்பர அழைப்புகளுக்கு
கடும் கட்டுப்பாடுகளும் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை விரைவில்
நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்த புதிய இந்திய தண்டனை சட்டம் கொடூரமானது என்று காங்கிரஸ்
மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘‘3 புதிய குற்றவியல்
சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில் புதிய இந்திய தண்டனைச் சட்டம்
மிகவும் கொடூரமானதாக உள்ளது. இந்த சட்டப்பிரிவு ஏழைகள், தொழிலாளி வர்க்கம், நலித்த
பிரிவினருக்கு எதிராக ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. போலீஸ் காவலை
60 முதல் 90 நாட்கள் வரை நீட்டிப்பது போலீஸ் காவலில் அதிகப்படியான துன்புறுத்தலுக்கு
மட்டுமே வழிவகுக்கும். எனவே 2024ம் ஆண்டு பொறுப்பேற்கும் புதிய அரசு இந்த சட்டங்களை
ஆய்வு செய்து, கடுமையான விதிகளை நீக்குவதை பரிசீலிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சட்டம் மூலம் யாரையும் எந்த காரனம் இல்லாமலும் கைது செய்து
90 நாட்கள் வரையிலும் சிறையில் அடைக்க முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம்
தெரிவித்து வருகின்றனர்.