Share via:

ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட
மனக்கசப்பு இன்னமும் பிரேமலதா விஜயகாந்திற்குத் தணியவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க.
கூட்டணிப் பேச்சும் அவரை திணற வைத்திருக்கிறது. எனவே, புது ரூட்டில் ஒரு காய் நகர்த்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சியான
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகியோர் வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில்,
தமிழக காவல் துறைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். இது தி.மு.க.வுக்கு
காட்டும் பச்சைக் கொடி என்கிறார்கள்.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், ‘’உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார்
படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம்
அருகே தமிழக காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது.
தமிழக காவல் துறை இதுபோன்று சிறந்த முறையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் தான்,
குற்ற வழக்குகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. தேமுதிக
சார்பாக காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனையும் என்கவுண்டர் செய்து
தண்டனை வழங்க வேண்டும் என்று நேற்று தெரிவித்து இருந்தோம்” கூறியிருக்கிறார்.
என்கவுண்டர் தவறு என்று அத்தனை கட்சிகளும் பேசிவரும் நிலையில்
பிரேமலதா இப்படி பாராட்டியிருப்பது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு கடுமையான கோபத்தை
உண்டாக்கியிருக்கிறது. பா.ஜ.க. தொடங்கி தே.மு.தி.க. வரை துரோகம் செய்கிறார்களே… பிரேமலதா
ஆசைப்பட்டாலும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாதா
என்று கேட்கிறார்கள்.
அதெல்லாம் முக்கியமில்லீங்க, எங்க கட்சிக்கு எங்க வாய்ப்பு இருந்தாலும்
போவோம் என்கிறது பிரேமலதா டீம். நல்ல கட்சி, நல்ல கொள்கை.