Share via:
ஜாதி மோதல்கள், கோயில் நுழைவுக்கு அனுமதி மறுப்பு, ஆணவக்கொலை, பாலியல் கொடூரம் என பட்டியலின மக்களுக்கு எதிராக எத்தனையோ அவலங்கள் நேர்ந்த நேரத்தில் எல்லாம் நேரில் வந்து ஆதரவு கொடுக்காத மத்திய அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேலியில் நடந்த பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு நேரில் ஆஜராகி கண்டனம் செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரை சார்ந்த சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, ‘இனி பூணூல் அணியக்கூடாது’ என்று மிரட்டியும் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எல்.முருகன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர், ‘’திருநெல்வேலி பூணூல் அறுப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அவரது இல்லத்துத்துக்கு சென்று ஆறுதல் கூறினேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஓர் மதத்தவரின் புனித பொருட்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவது, கேலி செய்வது ஆகியவை பெரும் குற்றமாகும்.
ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத சிறு கும்பல் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்த செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து அந்த திரைமறைவு கருப்பு நபர்களையும் சட்டத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்திற்கு பட்டியலினத் தலைவர்கள் எல்.முருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ‘’பூணூல் விவகாரத்திற்காக நேரில் ஆஜராகி தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் எல்.முருகன் ஜாதிப் படுகொலைக்கும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்திற்கும், கோயில் அனுமதி மறுப்புக்கும் என்றாவது நேரில் வந்து குரல் கொடுத்திருக்கிறாரா.. சமூக அக்கறையுள்ளவர் போன்று நடிக்க வேண்டாம். பிராமணர்கள் என்றால் மட்டும் நீதி கேட்டு வீடு வரைக்கும் செல்ல முடிகிறது. எங்கள் ஜாதிக்கு அறிக்கை மட்டும் தானா?’’ என்று கொதிக்கிறார்கள்.