Share via:
வரும் 2026 தேர்தலில்
திமுக கூட்டணிகள் 200 இடங்களில் ஜெயிக்க வேண்டும் என இப்போதே முதல்வர் ஸ்டாலின் இலக்கு
நிர்ணயித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இதனை முறியடிக்க வேண்டும் என்றால் மெகா
கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதன் அடிப்படையில்
பா.ஜக. கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலில்
அ.தி.மு.க.வுக்கு சுனில் பணியாற்றினார். மரியாதைக்குரிய இடங்களைப் பிடித்து எதிர்க்
கட்சியாக மட்டுமே எடப்பாடி ப்ழனிசாமியால் மாற முடிந்தது. ஆகவே, வெற்றி பெற வேண்டும்
என்பதற்காக பீகாரில் தனிக்கட்சித் தொடங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி பழனிசாமி
தன்னுடைய தேர்தல் ஆலோசகராக அமர்த்தியிருக்கிறார். இதன் ஒரு பகுதியாகவே, எடப்பாடி பழனிசாமியின்
கூட்டணிப் பார்வை மாறியிருக்கிறது.
மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்தில் கூட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘பாஜகவுடன் கூட்டணி என்ற
பேச்சுக்கே இடமில்லை’’ என திட்டவட்டமாகக் கூறிவந்தார். அதோடு திருமாவளவன், விஜய், பா.ம.க.வுடன்
கூட்டணி அமைக்கும் எண்ணத்துடன் இருந்தார். ஆனால், பா.ம.க.வும் விஜய்யும் உள்ளே வருவதில்
நிறைய சிக்கல் ஏற்பட்டது. இரண்டாவது பெரிய கட்சி யார் என்ற குழப்பம் எழுந்தது.
இந்நிலையில் பிரசாந்த்
கிஷோரை எடப்பாடியின் மகன் மிதுன் பேசி தங்களுக்கு பணியாற்ற சம்மதிக்க வைத்திருக்கிறார்.
அதன் அடிப்படையில், கூட்டணிக்கு அழைப்பு விடும் எந்தக் கட்சியையும் உதாசீனம் செய்ய
வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையிலே திருச்சியில் நடந்த செய்தியாளர்
சந்திப்பில் பேசிய் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இன்னும் ஒன்றரை ஆண்டுகள்
தேர்தலுக்கு இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும்.
அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம்
இணைக்கப்பட்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம்” என்று அதிரடியாகத்
தெரிவித்திருக்கிறா.
பாஜகவுடன் கூட்டணியா
என்ற கேள்விக்கு வழக்கம்போல் மறுப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் தந்திருக்கும்
பதில் புதிய பேசுபொருளாகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியை ஏற்றுக்கொள்வார் என்றே தெரியவருகிறது.
ஜனவரி மாதம் முதல் பிரசாந்த் கிஷோர் டீம் முழுமையாக களத்தில் இறங்குகிறார்கள் என்பதால்
தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கிறது.