News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட  பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு செய்தனர்.

 

அதன்படி 58,571 பேரிடம் இருந்து ரூ.930 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் கோவை டான்பிட் கோர்ட்டு அவர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தன்னை அப்போது இவ்வழக்கை விசாரித்த போலீசார், தன்னை கடத்திச்சென்று ரூ.3 கோடியை பறித்ததாக கமலவள்ளி போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய பிரமோத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. இவர் தற்போது கரூர் காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், கோர்ட்டில் அவர் ஆஜராக வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 

கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் பிரமோத்குமாரும், மற்ற 4 பேரும் நீதிபதி கோவிந்தராஜன் முன்பு நேரில் ஆஜரான நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதற்கிடையில் பிரமோத்குமார், கமலவள்ளியை மிரட்டி பணம் பறித்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே இவ்வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். 

 

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி கோவிந்த ராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, வருகிற 28-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று அறிவித்ததோடு அன்றைய தினம் பிரமோத்குமார் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். எனவே வருகிற 28ம் தேதி பிரமோத்குமார் உள்ளிட்ட 5 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link