Share via:
லண்டனில் படித்துவிட்டு
அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை
ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள்
யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும்
வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை.
அண்ணாமலை இன்று காலையில்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார்
என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும்
மூத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், ‘’அண்ணாமலை படிப்பு முடித்து திரும்பிவிட்டார் என்பது
உண்மை தான். ஆனால், அவரை மீண்டும் தமிழகத் தலைவராக்குவதா அல்லது டெல்லியில் வேறு போஸ்டிங்
கொடுப்பதா என்ற குழப்பம் நீடிக்கிறது.
ஏனென்றால் சமீபத்தில்
எடப்பாடி பழனிசாமி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அதோடு ஸ்டாலினை
தோற்கடிக்கும் வகையில் நிச்சயம் கூட்டணி அமையும் என்றும் சொல்லியிருக்கிறார். செங்கோட்டையனும்
இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிறார். இவை எல்லாமே அண்ணாமலை தலைவராக வந்தால்
நடக்கப் போவதில்லை. தமிழிசை செளந்தராஜன் அல்லது வானதியை தலைமைப் பதவிக்குப் போட்டால்
மட்டுமே அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்குப்
பிறகே தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது….’’ என்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜாவிற்கு எதிரான இரண்டு அவதூறு
வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் இரு வழக்குகளிலும்
தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியிருப்பதும் கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.