Share via:

டெல்லியில் அமித் ஷா சந்திப்புக்குப் பிறகும் கூட்டணியை எடப்பாடி
பழனிசாமி உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடும் வேலையில் அ.தி.மு.க.வின்
மாஜி அமைச்சர்கள் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான இபிஎஸ், இந்தியாவின்
இரும்பு மனிதரான அமித்ஷாவும் சந்தித்துக் கொண்டனர் என்று முன்னாள் அதிமுக அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து பேசும் அ.தி.மு.கவினர், ‘’அமித் ஷா சந்திப்புக்கும்
கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். ஏனென்றால்
பா.ஜ.க. மீது தமிழ்நாடு மக்களுக்கு இன்னமும் கோபம் இருக்கிறது. அதனாலே தமிழகத்திற்கு
எதிராக நிதி கொடுக்காமல் இழுத்தடிக்கும் பாஜக,மும்மொழி கொள்கையை திணிக்க பார்க்கும்
பாஜகவை, தொகுதி மறுசீரமைப்பு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கப்படவேண்டும்
என வலியுறுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கல்விக்கான நிதியை
மும்மொழி திணிப்பு காட்டி நிறுத்தி வைத்துள்ளதை உடனே வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு
கோரிக்கை வைத்துள்ளார்.
2026 திறனற்ற திமுக ஆட்சியை மாற்றத்திற்கு அதிமுக கட்சி தயார்
ஆனால் அதற்காக அவசரப்பட்டு தொண்டர்களிடம் இணக்கம் இல்லாத கூட்டணியை தமிழக நலனுக்கு
எதிராக திட்டங்களை திணிக்கும் கூட்டணியை அமைப்பதில் எந்த பயனும் இல்லை பாஜக கட்சியின்
மாற்றங்களை செயல்பாடுகளை பொறுத்து கூட்டணியை முடிவு செய்து கொள்ளலாம் என்பதே அவருடைய
எண்ணம். ஆனால், அ.தி.மு.க.வின் மாஜிக்கள் அதற்குள்ளாக அமித் ஷாவுக்கு ஜால்ரா போட்டு
கட்சியைப் பலவீனப்படுத்துகிறார்கள்’’ என்று வேதனைப்படுகிறார்கள்.
இந்நிலையில் மருது அழகுராஜ், ‘’தான் ஏற்றுக் கொண்ட தலைமையை புகழாரம்
செய்வதில் தவறேதும் இல்லை தான்.. ஆனால் அந்த புகழ்ச்சியில் சிறிதளவாவது உண்மையும் நம்பகத்தன்மையும்
இருக்க வேண்டும். சர்தார் வல்லபபாய் படேல் சிதறிக்கிடந்த மாகாணங்களை நிலபிரபுக்களிடமும்
குறுநில மன்னர்களிடமும் ஆட்பட்டிருந்த பிரதேசங்களை பாளையங்களை ஒன்றுசேர்த்து ஒன்றுபட்ட
தேசத்தை கட்டியமைத்து இந்தியா என்கிற பரந்த தேசத்தை உருவாக்கி பூமிப்பந்தில் பாரதம்
என்கிற பூகோள மாலையை தடுத்திட தொண்டு செய்து பாடுபட்ட மாபெரும் தலைவர்… ஆனால் எடப்பாடியோ
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து உயர்ந்தோங்கி நின்ற அண்ணா திமுக என்கிற
அழகிய இயக்கத்தை உடைத்து நொறுக்கி சாதியாக மண்டலமாக பிளவுக்குள்ளாக்கி நாசப்படுத்தியவர்
அந்த எடப்பாடியை வல்லபபாய் பட்டேலோடு ஒப்பிட்டிருப்பது மிகத்தவறு… அது ஒரு சிற்பிக்கும்
ஜல்லி உடைக்கும் மெஷினுக்குமான வேறுபாடல்லவா’’ என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
இந்த வகையில் அ.தி.மு.க. மீது தொடர்ந்து பலரும் கல்லெறியும் நிலையில்,
இதனை திசை திருப்பும் வகையில் மீண்டும் தி.மு.க.வுடன் போஸ்டர் யுத்தத்தை அ.தி.மு.க.வினர்
தொடங்கியிருக்கிறார்கள். டாஸ்மாக் ஊழலை முன்வைத்து, ‘1000 ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து
1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?’ என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
யார் அந்த சார் என்பது போல் வைரலாகுமா யார் அந்த தியாகி?