Share via:
வருகிற 27ம் தேதி உலக அமைதிக்காக அனைத்து மதத்தினரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 13 நாட்களை தாண்டி செல்லும் போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான அயல்நாட்டினரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக காஸாவில் உள்ள மருத்துவமனையில் ராக்கெட் விழுந்து 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குடிநீர், உணவு, மருந்து என எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் போரை உடனடியாக இருதரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கோரிக்கை வைத்தும் எந்த பயனுமில்லை.
இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 27ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து போப் பிரான்சிஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘வருகிற 27ம் தேதியன்று உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலக அமைதியை விரும்பும் அனைத்து மதத்தினரும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது என்று அறிவுரை கூறியுள்ள போப் பிரான்சிஸ், காஸாவில் மனிதாபிமான பேரழிவை தவிர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று உலக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த பதிவை வைரலாக்கும் மக்கள், உலக அமைதியே முக்கியமானது. போர் எதற்கும் தீர்வாகாது என்ற கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

