Share via:
ஆளும் தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக செயல்பட முடியாமல் ஜெயிலுக்குள் இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் நிலை உருவாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன் தண்டனை விபரங்கள் இன்று வெளியாகியுள்ளது.
பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இதனை மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக இருவருக்குமான தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றாலும் தண்டனை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. எனவே, பொன்முடி ஜெயிக்குப் போவது உறுதியாகியுள்ளது. ஜெயிலுக்குப் போய் வந்த பிறகும் அவரால் அரசியலில் ஜொலிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் பொன்முடியின் அரசியல் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அஸ்தமித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதையடுத்து எந்த நேரமும் பொன்முடி ராஜினாமா செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. கடைசி நிமிடம் வரையிலும் காத்திருக்க வேண்டாம் என்று தி.மு.க. மேலிடம் நினைக்கிறதாம்.
அதேநேரம், பொன்முடியிடம் இருக்கும் உயர்கல்வித் துறை பதவியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர்களிடம் போட்டோ போட்டி ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கும் அலை மோதுகிறார்கள். இதையடுத்து பெரிய அளவுக்கு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.