Share via:

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து 1300 காணொளி தன்னிடம் உள்ளது
என அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசி இருந்தார். வழக்கு விசாரணை
முடிந்து தீர்ப்பு வந்த பிறகும் அவர் ஒரு வீடியோவையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை.
அந்த வீடியோ எங்கே ஸ்டாலின் என்று அதிமுகவினர் நெருக்கடி கொடுத்துவருகிறார்கள்.
பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்ததும் முதல்வர் ஸ்டாலின்,
‘’பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு
நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த
‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்’’ என்று அறிக்கை கொடுத்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ‘’அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது
செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை.
நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்’’ என்று போட்டுத் தாக்கியிருந்தார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் கனிமொழியும் பொங்கியிருந்தார்.
இதற்கு அதிமுகவினர் நடந்த சம்பவத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ‘’ பிப்ரவரி
12, 2019 அன்று 19 வயதுடைய பெண் ஒருவரை சபரிராஜன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என
அழைத்துள்ளார். பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே காரில் காத்திருந்த சபரிராஜனும்,
அவனது நண்பனான திருநாவுக்கரசுவும், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் ஏற வைக்கிறார்கள்.
காரில் பயணித்த போது, கொஞ்சம் தூரத்திலேயே சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரும் காரில்
ஏறுகிறார்கள்.
நால்வரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து,
அதை வீடியோவாகவும் எடுக்கிறார்கள். அதை வைத்து மிரட்டி, பணம் கேட்கும்போது எல்லாம்
தர வேண்டும் என கூறிவிட்டு, பாதி வழியிலேயே அப்பெண்ணை ரோட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.
அந்த பெண் நடந்த விவகாரத்தை வீட்டில் சொல்லாமல் இருக்கிறார். ஆனால் சில நாட்களில் இந்த
நால்வரும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதும், தன் குடும்பத்திடம் அதுபற்றி கூறுகிறார்.
அதையடுத்து, அந்தப் பெண்ணின் சகோதரர் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரை கண்டறிந்து,
அவர்களை அடித்து, அவர்களின் செல்போனை பறித்து வீடியோவை டெலிட் செய்ய முயன்றபோது, அதில்
மேலும் 3 பெண்களை இவ்வாறு கட்டாயப்படுத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது
அவர்களுக்கு தெரியவருகிறது.
இதையடுத்து பிப்ரவரி 24ம் தேதி, அதாவது சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு
பிறகு, அந்த பெண்ணை காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளிக்க வைக்கிறார்கள்.
அதில் 2016 முதலே தான் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை தொடர்ந்து அவர்கள்
மிரட்டி வருவதாகவும் அப்பெண் கூறியிருக்க, சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசவின் லேப்டாப்,
மொபைல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் ஆய்வு செய்ய, அதில் திருநாவுக்கரசுவின்
வீட்டில் வைத்து பல பெண்களிடம் இதுபோல அத்துமீறி நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்து வைத்திருப்பது
தெரியவருகிறது. உடனடியாக இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சபரிராஜன்,
திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது sections 354A, 354B, 394
of the IPC, 66E of the IT act, Section 4 of the TN Prohibition of sexual
harassment of women act ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நால்வரும்
கைது செய்யப்படுகின்றனர்.
பின்னர் கைதான நால்வரின் மொபைலில் இருந்த வீடியோக்கள், ஆடியோக்கள்
என எல்லாவற்றையும் காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு
இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரரை புகார் கொடுத்த காரணத்திற்காக
திருநாவுக்கரசுவின் நண்பர்கள் தாக்க, அது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள்
தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீவிரத்தன்மையை
கருத்தில் கொண்டு, மார்ச் 12ம் தேதி, இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அதிமுக
அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று, வழக்கை
சிபிஐக்கு மாற்ற அதிமுக அரசு உத்தரவிட்டது.
சிபிஐ இந்த வழக்கை ஏப்ரல் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சிபிஐ இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சபரிராஜனையும், அவனுக்கு துணை போனதாக திருநாவுக்கரசு,
சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹரானிமஸ் பால், அருளானந்தம், அருன்குமார் ஆகியோரது
பெயர்களையும் குற்றப்பத்திரிக்கையில் இணைத்துக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தனி நீதிமன்றம்
ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு பிப்ரவரி 14, 2023 அன்று தான்
முதன்முறையாக விசாரணைக்கு வந்தது.
40 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, எந்த சாட்சியங்களும் பிறழ்
சாட்சிகளாக மாறாத காரணத்தால், குற்றவாளிகள் இன்று தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு நடுவே பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளியிட்ட காவல் அதிகாரியான கோவை எஸ்.பி
பாண்டியராஜன் மற்றும் பொள்ளாச்சி சரக டி.எஸ்.பி ஜெயராஜ் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம்
செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க
வேண்டும் என்கிற நோக்கத்தில், இந்த விவகாரம் முதலில் தெரியவந்த போது, புகார் கொடுக்க
முன்வராத பெண்களின் குடும்பத்தினரை நேரடியாக அணுகிட அதிமுக அரசு அறிவுறுத்தியதன் பேரில்,
பொள்ளாச்சி சரக டி.எஸ்.பி ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளராக இருந்த ராஜேந்திர பிரசாத்
ஆகியோர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, இதை முறைப்படி
ஒரு புகாராக பதிவு செய்ய அவர்களை வலியுறுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தான் புகாரே
பதிவு செய்யப்பட்டது. தன் வசதிக்கு ஏற்ப, திமுகவினரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி
அவர்களும் உண்மையை மறைத்து, பாதி தகவலை மட்டும் பகிர்ந்து, தேர்தல் நேரத்தில் திமுக
செய்த அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற நினைப்பது கேவலமான செயல்.
வீடியோ இருக்கிறது என்று சொன்ன ஸ்டாலின் அந்த வீடியோவை ஏன் தரவில்லை.
அப்படியென்றால் என்ன மறைக்கிறது திமுக என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.