Share via:

பெரியாரை ஒழித்துக்கட்டுவது தான் என்னுடைய முதல் அரசியல் என்று
தொடர்ந்து பெரியார் மீது சீமான் தாக்குதல் நடத்திவருகிறார். பெரியார் பற்றி என்னுடன்
விவாதிக்க யார் வந்தாலும் சரி, நான் ரெடி என்று சவால் விட்டிருந்தார்.
சீமானுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று
திருமுருகன் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தாலும் அவரை சீமான் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சீமானுக்கு அடைக்கலம் கொடுத்த கவிஞர் அறிவுமதி பெரியார்
பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகச் சொல்லி நாம் தமிழர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
மன்னார்குடியில் பேசிய பாவலர் அறிவுமதி, ‘’ பெரியாரிய உழைப்பும்,
மார்க்சிய உழைப்பும் தான் தமிழ்நாட்டில் கைநாட்டுகளை, கையெழுத்துகளாக மாற்றி உள்ளது.
கொள்கை ரீதி விமர்சனங்கள் இருக்கலாம், ஆயிரம் கோபங்கள் இருக்கலாம். ஆனால், பெரியாரை
விமர்சிக்கும் தகுதி, அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் தமிழ் நாட்டில் எந்த ஒரு கொம்பனுக்கும்
இல்லை. பெரியார் குறித்து விமர்சிக்க எவன் வந்தாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்’’
என்று சவால் விட்டிருக்கிறார்.
சீமான் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த காலத்தில் அவருக்கு
அடைக்கலம் கொடுத்து உணவும் கொடுத்தவர் கவிஞர் அறிவுமதி என்பதை சீமானே பல இடங்களில்
கூறியிருக்கிறார். இந்நிலையில் அறிவுமதியே, ‘பெரியாரை விமர்சிக்கும் தகுதி, அறிவும்,
ஆற்றலும், ஒழுக்கமும் தமிழ் நாட்டில் எந்த ஒரு கொம்பனுக்கும் இல்லை’ என்று அவர் நேரடியாக
சீமானுக்கு சவால் விட்டிருக்கிறார்.
இதற்கு சீமான் என்ன பதில் சொல்லப் போகிறார்?