Share via:
பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 17 வயதான இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக மேலபுளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் மாணவன் ஜீவாவுக்கு பக்கத்தில் வந்து நின்றார்.
திடீரென்று ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவன் ஜீவாவை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவனை கொலை செய்த ஆனந்த் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனந்த் எதற்காக ஜீவாவை கொலை செய்ய வேண்டும்? முன்விரோதமா? அல்லது காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் பிளஸ்2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
