Share via:
பிள்ளை பேசவே இல்லை என்று அம்மா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக்கடன்
போட்டாளாம். முதன் முதலாகவாயைத் திறந்து பேசிய பிள்ளை, ‘எப்பம்மா உன் தாலியை அறுப்பே..’ன்னு
கேட்டதாம். தமிழகத்தில் இந்த சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த வகையில் மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமனை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்யச் சொல்லுங்க என்று தி.மு.க.வினர்
மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.
ஏனென்றால், நிர்மலா சீதாராமன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காமெடி
கன்டென்ட் ஆக மாறிவிடும். வெங்காயம் விலை ஏறிடுச்சு என்றால் நான் வெங்காயம் பயன்படுத்த
மாட்டேன் என்பார். தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேட்டால், என்னிடம் பணம் இல்லை
என்பார். ஆகவே, தமிழகத்தில் வந்து அவர் என்ன பேசினாலும் அதை வைரல் ஆக்கிவிடலாம் என்று
தி.மு.க.வினர் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.
அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி ஒன்றிய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இன்றும், நாளையும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று
காலை கிருஷ்ணகிரி தொகுதி பாஜ வேட்பாளர் சி.நரசிம்மனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறார்.
பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் புறப்பட்டு
செல்கிறார். அங்கு பிற்பகல் 12.35 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜ வேட்பாளர்
கார்த்தியாயினியை ஆதரித்து பேசுகிறார்.
தொடர்ந்து அவர் தஞ்சாவூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை
4 மணியளவில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பாஜ வேட்பாளர் எம்.முருகானந்தத்தை ஆதரித்து
பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து நாளை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நீலகிரியில்
மின்ரேகா தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்
மேலும் நீலகரி தொகுதி பாஜ வேட்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு
ஆதரவாக வாக்குகளை கேட்கிறார். நாளை மாலை 4 மணியளவில் கோவையில் ரோடு ஷோ நடக்கிறது. இதில்
பாஜ வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணியளவில் பொள்ளாச்சி
தொகுதி வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரசாரத்தை
முடித்துக் கொண்டு கோவை வரும் நிர்மலா சீதாராமன் நாளை இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஆக, அம்மணி பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வைரலாக்க தி.மு.க.வினர்
தயாராக காத்திருக்கிறார்கள். அதேநேரம், தி.மு.க.வினரை ஒன்றிய அமைச்சர் ஓட ஓட விரட்டுவார்
பாருங்கள் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.