Share via:
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் இன்று காலை எடப்பாடி
பழனிச்சாமி இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயிலுக்கு தடபுடல் காலை விருந்து
வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிரதமர் மேடையில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று ஆலோசனை
செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்க விரும்புவதாக சொல்லப்பட்டாலும்,
அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பிரேமலதா, ராமதாஸ், பன்னீர் இல்லாமல் இதோடு
கூட்டணியை முடித்துக்கொள்ளலாம் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், இன்னும் சில கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணியாக்கும்
எண்ணத்தில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். எனவே, கூட்டணி முடிவு செய்யவில்லை என்றாலும்
நாளைய பிரதமர் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி பிரேமலதா, பன்னீருக்கு இன்று அழைப்பு
விடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதேநேரம், நாளை பிரதமர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் தமிழகத்தைக்
கலக்கும் வகையில் பிரமாண்டமாக அமையவேண்டும் என்று மெகா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பயணத் திட்டத்தின்படி, நாளை மதியம் 2.15 மணியளவில் கேரள மாநிலம்
திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படும் சென்னை பழைய விமான
நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மதியம் 2.50 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு,
மதுராந்தகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் தரையிறங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு
அழைத்துச் செல்லப்படுகிறார். பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடைபெறவுள்ள இந்த
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். பொதுக்கூட்டம்
நிறைவடைந்ததும், மாலை 5 மணியளவில் அவர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்படுகிறார்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதி
கட்சி தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய
தலைவர்கள் பலரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
பிரேமலதா, பன்னீரையும் சிறப்புப் பார்வையாளர்களாக பங்கேற்க வைக்கும்
முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியோ, முதல் தேர்தல் கூட்டத்தை என்.டி.ஏ.
தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது.