Share via:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த 25ம் தேதி ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருக்கா வினோத்தை பிடித்து அவரிடம் இருந்த மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட கருக்கா வினோத் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், நந்தனம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கருக்கா வினோத் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பா.ஜ.க. தலைமை வரை பூதாகரமாக வெடித்தது. சென்னை போலீஸ் கமிஷனர், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணி குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள கருக்கா வினோத் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் உள்ள ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.