Share via:
கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம் மாற்றப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் திரைத்துறையினர் சார்பில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. அதன்படி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் 100 விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக இதன் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற (2024) ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, ‘‘சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதாலும், இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாலும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி (2024) ஜனவரி 6ம் தேதி (சனிக்கிழமை) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணியளவில் ‘கலைஞர் 100’ விழா நடைபெறும் என்று தெரிவித்தார். இவ்விழாவில் 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.