Share via:
கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் வைகோ ஆகியோர்
இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி நடிகர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக களத்தில்
நிறுத்தினார்கள். இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சிகளும் இடம் பிடித்தன.
மக்கள் நலக்கூட்டணி எங்கேயும் டெபாசிட் வாங்கவில்லை என்றாலும்
தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்பட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இதையடுத்து,
இந்த கூட்டணிக்குப் பின்புலமாக ஜெயலலிதா இருந்தார் என்றும் விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன்
மூலமே பேரம் பேசப்பட்டு தி.மு.க.வின் வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
வரும் 2026 தேர்தலிலும் அப்படியொரு முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாகவே அதிகாரத்தில் பங்கு, மதுவிலக்கு விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார்
திருமாவளவன். சாம்சங் விவகாரத்தில் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை முடிந்த பிறகும்
போராட்டத்தைப் பெரிதாக்குகிறது கம்யூனிஸ்ட். இந்த நிலை தொடரும்பட்சத்தில் விரைவில்
இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகம்.
கடந்த முறை வைகோவும் திருமாவளவனும் இந்த முயற்சியை முன்னெடுத்தார்கள்.
இப்போது ம.தி.மு.க. அமைதியாக இருக்கிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சிகள் போர்க்கோலத்தில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் பேசி முடிக்கப்பட்டதாலே
இந்த இரண்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் மக்கள் நலக்
கூட்டணியை உருவாக்கப் போகிறார்கள் என்று தெரிகிறது.
முன்பு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது போன்று இப்போது
நடிகர் விஜய் கட்சியை முன்னிலைப்படுத்துவார்கள். தி.மு.க. வாக்குகளை சிதறடித்தால் போதும்,
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க.வின் திட்டம்.
இதற்காகவே திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னெடுப்பு செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த முறை தி.மு.க. சுதாரித்துக்கொள்ளுமா..?