Share via:
திண்டுக்கல் அருகே , அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது.
இதையடுத்து சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பலவில்லை . இதனால் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும் , சகதியுமாக மாறிவிடுகிறது .
அப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழை காரணமாக லட்சுமிநாயக்கன்பட்டி ஊர் எல்லையில் இருந்து கல்லுப்பட்டி பிரிவு வரை உள்ள மண்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சேறும் , சகதியுமாக அந்த பாதை காட்சியளிப்பதை பார்த்த கிராம மக்களில் சிலர் தேங்கி கிடக்கும் மழைநீரில் குளியல் போட்டு நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு கூட அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை.தெருவிளக்குகள் பழுதடைய்ந்த நிலையில் உள்ளன . இதனால் இரவில் எங்கள் கிராமமே இருளில் மூழ்கிவிடுகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். கிராம மக்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே மண்பாதையில் தேங்கிய மழைநீரில் குளித்து போராட்டம் நடத்தினோம் என்றனர்.
இதை அடுத்து அப்பகுதி மக்களுக்கு உரிய சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. ஏற்கனவே பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மக்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்/ எனவே தமிழ்நாடு அரசும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.