Share via:
விஜய் தன்னுடைய மாநாட்டில் இரண்டு எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்தார். ஒன்று வர்ணாசிரமத்துக்கு எதிராகப் பேசும் கட்சி. இரண்டாவது குடும்ப ஊழல் கட்சி என்று தெளிவாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர், ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா ?’ என்ற கேள்வி கேட்டு ரசிகர்களை புல்லரிக்க வைத்தார்.
இதன் மூலம் அவரது நேரடி எதிரி ஸ்டாலின், உதயநிதி என்று அடையாளம் காட்டியதாக சிலிர்த்துக்கொள்கிறார்கள். திராவிடமும் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து பேசிய அத்தனை விஷயங்களும் தி.மு.க. எதிர்ப்பு மட்டுமே. வரும் 2026 தேர்தலே இலக்கு என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
இதையடுத்து தி.மு.க.வினர் எல்லோருமே விஜய்யை கடுமையாக எதிர்த்து பதிலடி கொடுக்கிறார்கள். ஆனால், விஜய்க்கு பா.ஜ.க.வினர் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். வர்ணாசிரமக் கொள்கைக்கு எதிராக மேடையில் பேசிவிட்டு, தன் கொள்கை பாடலில் வர்ணாசிரமத்தை பரப்பிய பகவத் கீதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் விஜய்யை தங்களில் ஒருவராகவே பா.ஜ.க.வினர் பார்க்கிறார்கள்.
நாம் தமிழர் சீமான் பெயரளவுக்கு பா.ஜ.க.வை எதிர்த்துவிட்டு முழு அளவுக்கு தி.மு.க. எதிர்ப்பை முன்னெடுப்பார். அதே பாணியில் விஜய்யும் நுழைந்திருக்கிறார். பாசிசத்தையும் அதே அளவுக்கு எதிர்த்தால் மட்டுமே இவரது கட்சிக்கு என ஒரு தனித்துவம் கிடைக்கும்.
இப்போது தி.மு.க.வினர், ‘’கெளரி லங்கேஸ், கல்புர்கி,தபோல்கர், பன்சாரே, அனிதா, ஆசிபா, பில்கிஸ் பானுவை கொன்றது பாசிசமா ! பாயாசமா ? மாட்டுக்கறியின் பெயரால் மனிதனை கொலை செய்வது பாசிசமா ! பாயாசமா ? என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், மாட்டுக்கறியின் பெயரால் மனிதனை கொலை செய்வது என இந்த நாட்டு மக்களை சூறையாடும் பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜகவையும் பெயரை சொல்லக்கூட முதுகெலும்பு இல்லையா? என்றெல்லாம் விஜய்யிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஊழலும் பாசிசமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏதேனும் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவது விஜய்க்கு எந்த வகையிலும் பயன் தராது என்பதை அவர் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்..