Share via:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கினார். ஒவ்வொரு குருபூஜையின் போதும் சில நாட்கள் அந்தகக்கவசம் முத்துராமலிங்கத் தேவரை அலங்கரித்து வரும்.
குருபூஜைக்கு பின்னர் அண்ணாநகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தங்கக்கவசம் பாதுகாக்கப்படுவது வழக்கம். அதற்கான முழு பொறுப்பை அப்போது அ.தி.மு.க.வில் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்தார். இதற்கிடையில் அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதால் அதன் முழு பொறுப்பு கோரி அ.தி.மு.க. தற்போதைய பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஓ.பன்னீர்செல்வம் எந்தவகையிலும் உரிமை கோர முடியாத நிலையில், வங்கியில் உள்ள தங்கக்கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்த போது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது.
அதன்படி கட்சியின் பொருளாளராக இருக்கும் தன்னிடம் வருகிற குருபூஜை விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கக்கவசத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இது குறித்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ‘‘ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந் பொறுப்பில் தங்கக்கவசம் உள்ளது. அதன்படி கட்சியின் தற்போதைய பொருளாளரான சீனிவாசனிடம் தங்கக்கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வங்கிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.