Share via:

ஆளும் கட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சோப்பு போடுவது
போன்று அவ்வப்போது பாராட்டி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரது சமீபத்திய
படங்கள் எதுவுமே ஓடியதில்லை. அதனால் ராதாரவி, சரத்குமார் பாணியில் பார்த்திபனும் பா.ஜ.க.வில்
சங்கமம் ஆக இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கவர்னருடன் ஒரு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன்,
‘’இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ்
அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் ஆளுநர்
ரவி. அவருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன். நான் தமிழில் பேசியது, ஆளுநருக்கு
புரியுமா? என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்கு புரியும். அதனால் தைரியமாக
தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள். ஆகவே, தமிழ் புத்தகங்களை அவருக்கு
நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என
ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது. ஆளுநருடன் உரையாடியதில் எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி. மீண்டும் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது எனக்கு
அன்பு வந்துவிட்டது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும்”
என்று பேசியிருக்கிறார்.
கவர்னருடன் இருக்கவேண்டும் என்று பேசியது பா.ஜ.க.வில் சேர்வதற்குப்
பச்சைக் கொடி என்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்
வன்னியரசு இன்று பார்த்திபனுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிஆஅர். அதில், ‘’சினிமா
வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும்
செயல்பட்டவர். ஆனால், ஆளுனர் மாளிகை விழாவில்
பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.
ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா?
இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே
அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து
வெளியேறியவர் ரவி. இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல, “குழந்தை
திருமணம் நல்லது. நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்” என கடந்த கடந்த மார்ச்
12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?
அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு
பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில்
செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?
தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின்
தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே
போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர்
ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க
முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு
செய்யக்கூடிய துரோகமில்லையா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விழா என்றால் கொஞ்சம் ஆதரவாகப் பேசுவார்கள், அதற்காக பார்த்திபனை
துரோகி என்று பேசலாமா என்று கண்டனம் எழுகிறது.