Share via:
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி தொடரில் ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் என இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதன்படி இந்திய வீராங்கனையான அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில் தங்கப்பதக்கத்தை வென்றார். 2வது இடத்தில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும் மோனா அகர்வால் என்ற இந்திய வீராங்கனை 228.7 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.