முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன.

11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 171 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

டி63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே சாம்பியன்ஷிப் தொடரில் சரத்குமார் கடந்த 1.83 மீட்டர் உயரமே சிறந்த சாதனையாக இருந்தது. இதே பிரிவில் 1.78 மீட்டர் உயரம் தாண்டி நான்காம் இடத்தை பிடித்தார் வருண் சிங். மற்றொரு இந்திய வீரரான பதியர் ஏழாம் இடத்தை பிடித்தார்.

கடந்த முறை வெண்கலம் வெல்லும் வாய்ப்பை மாரியப்பன் மிஸ் செய்தார். இந்த சூழலில் நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரை 1.74 மீட்டருடன் தொடங்கினார். 1.78 மீட்டர், 1.82 மீட்டர், 1.85 மீட்டர் என படிப்படியாக அதை கூட்டி அசத்தினார். இறுதியாக 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

தங்கம் வென்ற மாரியப்பன், “நான் இந்த தொடரில் 1.95 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தேன். இங்கு நிலவும் குளிர் சூழல் காரணமாக தசைகள் இறுகின. அதன் காரணமாக 1.88 மீட்டர் மட்டுமே கடக்க முடிந்தது. இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளும் போது என்னால் சில டெக்னிக்குகளை (நுணுக்கம்) மேம்படுத்த முடியவில்லை. என்னுடைய பயிற்சியாளர் சத்யநாராயணா வெளிநாட்டில் பயிற்சி செய்யலாம் என்ற யோசனையை சொன்னார். அது எனது பாரிஸ் பயணத்துக்கும் உதவும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நான் பதக்கம் வெல்ல தவறினேன். நான் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டேன். அது எனக்கு உதவியது” என 28 வயதான தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் அமெரிக்காவில் அவர் பயிற்சி மேற்கொண்டார்.

மாரியப்பனின் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின், “ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் 2024 பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை அன்று உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டிற்கும், தமிழகத்துக்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன். இந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் பாரா தடகடத்தில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார்.

அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link