Share via:
ஆதரவாளர்கள் எல்லோரும் வெளியேறிய பிறகும் தனக்கு வைத்திலிங்கம்
துணையாக இருப்பார் என்று பன்னீர்செல்வம் மலை போல் நம்பிக்கொண்டு இருந்தார். அவரும்
இன்று பன்னீருக்கு டாட்டா காட்டிவிட்டார். இதையடுத்து திமுகவுக்குப் போவதா அல்லது சாமியாராகிவிடுவதா
என்று பன்னீர் யோசிப்பதாகத் தகவல்.
ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் வைத்திலிங்கம்
தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இன்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை தலைமைச்
செயலகத்தில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவில்
அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்திலிங்கம் என்னைவிட்டு போகமாட்டார் என்று பன்னீர் ரொம்பவே
நம்பிக்கை வைத்திருந்தார். பாஜக கூட்டணியில் பன்னீருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது
உறுதியாகிவிடவே, அவரும் திமுகவுக்கு பல்டியடித்துவிட்டார்.
இன்று திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், ‘’எடப்பாடி பழனிசாமி தலைமையில்
அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. அதனால் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் கால தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்தேன். எனக்கு
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது, ஆனால் தனியாக இணைய விரும்பவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ஓபிஎஸ் கடும் அப்செட்டில் இருக்கிறார். தனிக்கட்சி
தொடங்கிய டிடிவி தினகரனுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையையும் தனக்கு பாஜகவும்
எடப்பாடி பழனிசாமியும் கொடுக்கவில்லை என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இப்போது பன்னீருக்கு திமுகவில் இணைவது அல்லது பாஜகவில் இணைவது
மட்டுமே வழியாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிக்குள்ளும் போய் அவமானப்படுவதற்குப் பதிலாக
சாமியாராகிவிடுங்கள், அரசியலுக்கு முழுக்கு போடுங்கள் என்று அவரது உறவினர்கள் வேண்டுகோள்
வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி வருகையில் பன்னீருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்குமா
என்று பார்க்கலாம்.