Share via:
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கவிருக்கும் என் மண் என் மக்கள்
பயணத்தின் நிறைவு நாள் விழா, வரும் பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்
நடைபெறவிருக்கிறது. மாநாட்டுத் திடலை பார்வையிட்ட அண்ணாமலை, விழாவில் மோடி முன்னிலையில்
வி.ஐ.பி.களை இணைப்பதற்கு அதி தீவிரமாக வேட்டை நடத்திவருகிறார்.
இந்த மீட்டிங்கில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்கு அண்ணாமலை முயற்சி
செய்துவந்தாலும் இதுவரை பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. ஆகிய எவையுமே முடிவுக்கு வராமல்
இழுத்தடிக்கின்றன. காரணம் பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. தயவால் ஒரு ராஜ்சபா
சீட் வாங்கி அன்புமணி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் எம்பியாக உள்ளனர். எனவே, மீண்டும்
எம்.பி. பதவி தொடர வேண்டும் என்றால் எடப்பாடி வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எனவே, இப்போதைக்கு பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மட்டும்
மோடியை சந்திக்க வைப்பது என்றும் கட்சியில் இணைவதற்கு காங்கிரஸ் கட்சியின் சிட்டிங்
எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோருக்கு வலை வீசியிருக்கிறது.
வரும் 27ம் தேதி பல்லடம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை
5 மணிக்கு பிரதமர் மோடி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று
விட்டு, மதுரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அன்றிரவு தங்குகிறார். இங்கு தான் பன்னீரும்
தினகரனும் பிரதமரை சந்திக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் நாடாளுமன்றத்திற்கு தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும்
பிரதமரிடம் நிறைய வேண்டுகோள் வைக்க இருக்கிறார்கள். அதோடு இரட்டை இலையை முடக்குவதற்கான
அவசியத்தையும் தெரிவிக்க இருக்கிறார்களாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயதாரணி காங்கிரஸ் பாரம்பரிய
குடும்பத்தைச் சேர்ந்தவர். மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்து
வருகின்றனர். அவர் காங்கிரஸ் தலைமை பொறுப்பு எதிர்பார்த்தால், அது கிடைக்கவில்லை என்றதும்
சட்டமன்றத் தலைமை பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை
என்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
அவரை எப்படியாவது சரிக்கட்டும் முயற்சியில் அண்ணாமலை தீவிரம் காட்டி
வருகிறார். அதேபோல் திருநாவுக்கரசருக்கு சீட் கிடையாது என்று தலைமை முடிவு கட்டியிருக்கிறது.
தி.மு.க.வினரும் திருநாவுக்கரசரை எதிர்க்கிறார்கள். ஆகவே, அதிருப்தியில் இருக்கும்
அவரையும் வளைக்கத் துடிக்கிறார்கள்.
அண்ணாமலை கணக்கு ஜெயிக்குமா என்று பார்க்கலாம்.