Share via:
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும்
போகவேண்டும் என்று நினைப்பது போன்று அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்
இரட்டை இலையில் நின்று போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பது எடப்பாடி அணியினருக்கு
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பதவிக்கு வந்த
பின், 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து உள்ளது. எனவே நிலைமையை புரிந்து கொண்டு
பழனிசாமி அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழனிசாமி இல்லாத
அதிமுக உருவாகும்.
இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்காக தற்காலிகமாக
வழங்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதால், அந்த
உரிமையின் அடிப்படையில் இரட்டை இலை மீது உரிமை கோருவோம். எங்களுக்கு தான் இரட்டை இலை
கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில்,
தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம்’’
என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் எடப்பாடி அணியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், ஆளும் பா.ஜக. பக்கத்தில் நின்றுகொண்டே பன்னீர் இப்படி பேசுவதால், இரட்டை
இலையை பாதுகாக்கும் முயற்சியில் முன்கூட்டியே எடப்பாடி அணி இறங்குகிறது.
இரட்டை இலைக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை,
அவர் கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிலும், உயர் நீதி
மன்றத்திலும் முறையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.