Share via:
கடந்த இரண்டு முறை
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த நிலையில், கூட்டணித் தலைவர்கள் மேடை ஏற்றப்படுவார்கள்
என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், கூட்டணி அமையாத காரணத்தால் அந்த வாய்ப்பு பன்னீர்,
தினகரனுக்குக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில்
உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம்
ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார். சுமார் 600 பேர் போட்டியிட விருப்பமனு கொடுத்ததாக
கூறப்படுகிறது.
இதையடுத்து, நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற பா.ஜ.க. அணியினர் ஓ.பன்னீர்செல்வத்துடன்
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்
பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாஜக தரப்பில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங்,
எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம்
பேசிய ஓ.பன்னீர்செல்வம், தங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்
என்பதை பாஜக குழுவிடம் தெரிவித்ததாகவும் விரைவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.
தினகரன் உடனும் பாஜக குழுவினர் பேச்சு நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில், எத்தனை தொகுதியில் நிற்கிறோம் என்பது
முக்கியமில்லை, இரட்டை இலை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம். பா.ஜ.க. தரப்பில்
உறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆகவே மார்ச் 18ம் தேதி கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் தேர்தல்
பரப்புரைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் கலந்து கொள்வது உறுதியாகியிருக்கிறது.