Share via:
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இன்று
அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதோடு, ஜாதி ரீதியிலான
மிக முக்கியமான தாக்குதலை எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ பன்னீர்செல்வம் மறைமுகமாக முன்வைத்துள்ளார்
தென் மாவட்டங்களில் இருந்து யாரும் கட்சிப் பொறுப்புக்கு வந்து விடக்கூடாது என்று எடப்பாடி
செயல்படுகிறார் என பகீர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
ஸ்டாலினை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய பன்னீர்
இன்று முதல் திமுகவின் உறுப்பினராக சேர்ந்துகொண்டார். இந்த விஷயத்தை திமுகவினர் பெரும்
வெற்றியாகவே கொண்டாடுகிறார்கள்.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’பன்னீரை வரவேற்கும் பாஜக என்ற
கொடும் ஆக்டோபஸ் கரங்கள் தமிழ்நாட்டை விழுங்கக் காத்திருக்கும் தற்போதைய சூழலில், உணர்ச்சிகளை
விட அரசியல் வியூகங்களே பிரதானம்! ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்ததை எண்ணி உணர்ச்சிவசப்படுவதிலும்
வருத்தப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால், தேர்தல் களம் என்று வந்துவிட்டால் ‘Perception &
Narratives’ தான் ராஜா. அதைச் சரியாகக் கையில் எடுப்பது மிக முக்கியம். அந்த வகையில்,
தற்போதைய அரசியல் சதுரங்கத்தில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனது நகர்வுகளை
மிகக் கச்சிதமாகச் செய்து வருகிறார்…’’ என்று பாராட்டுகிறார்கள்.
அதேநேரம் அதிமுகவினர், ‘’கூச்சமே இல்லையா பன்னீர். “ரோஸி
டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே
ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே
இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம்
படித்துக் கொண்டிருந்தீர்கள்!
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை
எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக
வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான
தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம்
அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப்
போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?! “உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க”
என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம், கட்சிக்குள் இபிஎஸ்க்கு இருந்த அத்தனை குடைச்சல்களும்
அதாவது சசிகலா, ஓபிஎஸ் என எல்லோரும் தனித்தனியே போய்விட்டார்கள். எனவே, முழுமையாக கட்சி
இபிஎஸ்க்கு வந்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள்.
