Share via:
கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்தது.
இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னணி இடம் பிடித்திருப்பது கடும் சர்ச்சையை
ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த
10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில்
இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்
மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு
அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
அதேவேளையில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள்
3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் ஆடவர் ஹாக்கியில்
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். ஆடவருக்கான
மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடம் பிடித்துள்ளது.
ஈட்டி எறிதலில் அர்ஷத் நதீம் வென்ற தங்கப் பதக்கத்துடன் பாகிஸ்தான் 62-வது இடத்தில்
உள்ளது. 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா
முதலிடத்தில் உள்ளது. 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஜப்பான்
மூன்றாம் இடத்தில் 45 பதக்கங்களுடன் உள்ளது.
கடந்த ஒலிம்பிக்கில் 1 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப் பதக்கம் 4 வெண்கல
பதக்கத்துடன் மொத்தம் 7பதக்கங்களை வென்று 48வது இடத்தில் இருந்தது இந்தியா. இந்த முறை
1 வெள்ளி பதக்கம் 5 வெண்கல பதக்கம் ஆகியவற்றுடன் மொத்தம் 6 பதக்கங்களை பெற்று 71 வது
இடத்தை பெற்றுள்ளது.
விளையாட்டு அமைப்பில் பா.ஜ.க. தலைவர்கள் மீது வினேஸ் போகத் உள்ளிட்ட
வீரர்கள் போராட்டம் நடத்திய பிறகும் மோடியின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திறமையான வீரர்கள் இந்தியாவில் இருந்தும் அவர்களை தேர்வு செய்வதில் மோடி அரசு தோல்வி
அடைந்துவிட்டது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அடுத்த போட்டியிலாவது இந்தியா மீண்டு
வரட்டும்.