Share via:
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்த
4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம்
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை மிரட்டவும்,
விரட்டவும் அமித்ஷா கவனம் செலுத்தியதால் இப்படிப்பட்ட கொடூர தாக்குதல் நடந்துள்ளது,
அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில்
உல்லாசமாக இருந்த சுற்றுலாப் பயணிகளை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென சுற்றி
வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு
பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பகல் நேரத்திலேயே தைரியமாக வந்து மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள்
என்றால் மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருக்கிறது. மிக மோசமான தாக்குதலை நடத்தியவர்களை
அடையாளம் காண்பதிலும் தாமதம் நிகழ்வதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், தீவிரவாதிகள்
புகைப்படம் வெளியிடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.
இன்று பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து உளவுத்துறை கோட்டை
விட்டுள்ளது என்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’உளவுத்துறை
தோல்வி அடைந்திருப்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில்
பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கையாலே இந்த விளைவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த
தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
உளவுத் துறை பிஜேபிக்கு ஜால்ரா அடிக்கறவங்கள பத்தி நல்லபடியா ரிப்போர்ட்
கொடுப்பதையும் எதிர்கட்சிகளை பழிவாங்கவும் மட்டுமே பயன்படுத்திய விளைவு இது என்று எதிர்க்கட்சிகள்
கண்டனம் தெரிவிக்கின்றன.