Share via:
கேரளத்தில் நடந்திருப்பது தேசியப் பேரிடர் மட்டுமல்ல, உலகளாவியப்
பேரிடர். மீட்புப் பணியினர் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உடல் தோண்டி எடுப்பதும், உயிர் மீட்பதும்
நடந்துவருகிறது. சவக்கிடங்குகள் நிரம்பிவழிகின்றன. அடையாளம் காணப்படாமலே உடல்கள் அடக்கம்
செய்யப்படுகின்றன.
பொதுவாக நிலச்சரிவு சில நூறு மீட்டர் வரை தான் பாதிக்கும். ஆனால்,
வயநாட்டில் ஊரிலிருந்து 7 கீமீ தூரத்தில் நள்ளிரவு 2 மணிக்கு காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு
பாறைகள் சேறு சகதி ஆறாக பெருக்கெடுத்து வழியில் இருந்த பல சிறு சிறு ஊர்களை எல்லாம்
மொத்தமாக வாரிக் கொண்டு போய்விட்டது. அப்படியே போய் நீர்வீழ்ச்சியில் கலந்திருக்கிறது..
பலருடைய உடல் சாலை வழியாக சென்றால் 90 கீமீ தூரம் போக வேண்டும் அவ்வளவு தொலைவில் கிடைத்திருக்கிறது..
வீடுகள் இருந்த தடமே இல்லாத அளவுக்கு நிர்மூலமாக்கி குடும்பம் குடும்பமாக என இதுவரை
கணக்கு 300 பேரை விழுங்கி கொண்டு போய்விட்டது நிலச்சரிவும் சகதியாறும்.
இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டிய அமித்ஷா, ‘முன்கூட்டியே
தகவல் கொடுத்தோம், மக்களை பாதுகாப்பான இடத்தில் அமரவைக்கவில்லை’ என்று ஆளும் கட்சியை
குறை கூறியிருக்கிறார். அதற்கு பதிலடியாக, ‘இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்னது வேற
நடந்தது வேறு. அன்றைய தினம் காலையில் தான் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதுவரை ஆரஞ்சு
அலர்ட் மட்டுமே இருந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிதியுதவி அறிவிக்காமல், வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சுவது போன்று அமித்ஷா பேசியிருப்பது கேரள மக்களை கடுமையாகப் பாதித்திருக்கிறது.
இந்த நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை காண காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ராகுல்காந்தி,
பிரியங்கா காந்தி ஆகியோர் கேரளா வந்திருக்கிறார்கள்.
தற்போது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார்,
தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும்
களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய கடுமையான முயற்சிக்கு பாராட்டு
தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது.
அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த
தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால்
மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
பலர் மாயமான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்
என அஞ்சப்படுகிறது. முண்டக்கை பகுதியில் 500-க்கும்மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில்,
தற்போது 50 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் மழையின் அச்சுறுத்தல்: வயநாடு, மலப்புரம், பத்தனம்திட்டா,
இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில்
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால்
மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்கள் இப்போது உதவி செய்வதற்கு கேரளா விரைந்திருக்கிறது. கேரளா மீண்டு வரட்டும்.