Share via:
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்கள்
மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
சந்தீப் ராய் ரத்தோர், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனைகள் மேர்கொள்வதற்கு
உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் இணை
ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்,
காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் நிலைய எல்லைகளில் தீவிர
கண்காணிப்பு நடத்தி கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு
வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 12 முதல் 18 வரையிலான 7 நாட்களில்
கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 120.62 கிலோ கஞ்சா, 364 வலி
நிவாரண மாத்திரைகள், ரொக்கம், செல்போன் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2021 முதல் நடப்பாண்டு வரை பதிவு செய்யப்பட்ட 1,175 வழக்குகளில்
சம்பந்தப்பட்ட 2,298 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரித்து
சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இதுவரை 1,186 வங்கிக் கணக்குகள் முடக்கம்
செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 18 வரையிலும் கஞ்சா உள்ளிட்ட போதை
வழக்கில் கைது செய்யப்பட்ட 55 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்
ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள்
மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.