Share via:
மக்கள் டோர் டெலிவரி என்ற வார்த்தைக்கு முழுவதும் அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். உணவு, மளிகைப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என்று அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் காலம் மற்றும் பணவிரயம் தவிர்க்கப்படுகிறது என்று மக்கள் எண்ணுகின்றனர்.
மக்களின் இந்த எண்ணத்தால் நாளுக்கு நாள் ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதோடு இந்நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கமும் செய்து வருகின்றன.
அந்த வகையில் புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ள இந்நிறுவனங்கள் பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்டுள்ள மதுபான வகைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டம் ஏற்கனவே ஒடிசா மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முறையான அனுமதி பெற்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்வதற்கான திட்டத்திற்கு ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் அனுமதி பெற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.