Share via:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கிழக்கு திசைக் காற்றில் மாறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை (டிச.16) நாளை மறுநாள் (டிச.17) ஆகிய 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 10 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ‘‘நாளை (டிச.16) ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், மயிலாடுதுறை, நெல்லை, நாகை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இன்று காலை முதலே சென்னையில் பரவலாக பல இடங்களில் மிதமான மழை பொழிந்தது. திருவொற்றியூர், மாதவரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதோடு குளிர்ந்து காற்றும் விட்டு விட்டு சாரல் மழையாகவும் பெய்தது.
சென்னையில் பல இடங்களில் தற்போது மழைநீர் வற்றியுள்ள நிலையில் இன்று காலை பெய்த மழையால் மக்கள் மீண்டும் அச்சமடைந்தனர். மறுபடியும் கனமழை பெய்துவிடுமோ என்ற அச்சத்துடன் காணப்பட்டனர்.