Share via:
சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப்
பேசினார். அதன்பிறகு எடப்பாடி மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்.
அதோடு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கிறோம். தினகரனுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும்
தெளிவு படுத்தியிருக்கிறார்.
அதேநேரம், விரைவில் அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை அறிவிக்கும்
என்று எடப்பாடி அறிவித்திருந்தாலும் எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்குத் தயாராக
இருப்பதாகத் தெரியவில்லை.
பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் எல்லாமே பா.ஜ.க.வுடன் கூட்டணி
சேரவே விரும்புகிறார்கள். பூவை ஜெகன்மூர்த்தி, சில துக்கடா இஸ்லாமிய கட்சிகளை வைத்துக்கொண்டு
எப்படி கூட்டணி சேர்ப்பது, நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்று தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் கொடநாடு விவகாரத்தில் பெரிய சிக்கல் இருக்கிறது,
எடப்பாடி திகாருக்குப் போவார் என்றெல்லாம் பன்னீர் எடுத்துவிடுவதை நினைத்து எடப்பாடியுடன்
நிற்கும் மாஜிக்கள் கலங்கிப்போய் இருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் இருந்த ஒரே காரணத்தாலே
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை போன்றவற்றில் இருந்து தப்பியிருக்கிறோம்.
மோடிக்கு எதிராக நின்றால் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்
என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜி, வேலுமணி உள்ளிட்டவர்கள்
எடப்பாடியிடம் தங்கள் கவலையை தெரிவித்திருக்கிறார்கள். இத்தனை தூரம் பன்னீர் பாய்வார்
என்று புரியாமல் இருந்த எடப்பாடியும் இப்போது என்ன செய்வது என்று யோசனை செய்துவருகிறாராம்.
தேர்தலுக்குள் என்னவெல்லாம் மாற்றம் நிகழுமோ..?