Share via:

காதலை ஏற்காத சிறுமியை வாலிபர் வீடு புகுந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் 21 வயதான ராகவேந்திரா என்ற வாலிபர் அத்துமீறி நுழைந்தார். இவர் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
சிறுமி 12ம் வகுப்பு படிக்கும் போது அவரை பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி ராகவேந்திரா தொல்லை கொடுத்துள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாத சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறுமியை பின் தொடர்ந்து வந்த வாலிபர், அவரது பாட்டி வீட்டிற்கும் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். இருப்பினும் சிறுமி ராகவேந்திராவை காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று (நவம்பர் 9) இரவு வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை சிறுமி திறந்ததும் அவரை தள்ளிவிட்டு கதவை உட்புறமாக பூட்டியுள்ளார். பின்னர் சிறுமி தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பாட்டி, கதவை தட்டியும் ராகவேந்திரா கதவை திறக்காமல் சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் கதவை திறந்துள்ளார்.
இதில் ராகவேந்திராவின் உடலிலும் ஆங்காங்கே தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகவேந்திராவை கைது செய்து அழைத்துச் சென்றனர். காதலை ஏற்க மறுத்த சிறுமி தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.