Share via:
கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவிட்டது காங்கிரஸ்
கட்சி. நேற்று வந்த பிரேமலதாவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டு எங்களுக்கும்
ஒன்று கொடுப்பது என்ன நியாயம் என்று கொதிக்கிறார்கள்.
தேர்தல் பேச்சு தொடங்கியடும் காங்கிரஸ் 45 தொகுதிகளை கேட்டது.
திமுக 22 தொகுதிகளில் நின்றது. வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்
சட்டென சரண்டர் ஆகிவிடுவார்கள். கிரிஷ் சோடங்கர் அப்படி அடங்கவில்லை. மீண்டும் மீண்டும்
பேசிப்பேசி திமுகவுக்கு பிரஷர் கொடுத்துவிட்டனர்.
இதுகுறித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஒவ்வொருத்தரும்
கட்சி தொடங்குவதற்கு காரணம் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தன் மக்களின் குரலாக
சட்டமன்றத்தில் பேசுவதற்காகத் தான். அந்த வகையில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படுகின்றது.
தொகுதி எண்ணிக்கைகளை கூட்டி கேட்பதினால் கொள்கையற்றவர்கள் என்று ஆகிவிடாது. பொது எதிரியை
வீழ்த்த சீட்டு எண்ணிக்கையை குறைத்துக் கொண்டுதான் வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
அதேபோன்று பொது எதிரியை வீழ்த்த திமுக’வும் தன் சீட்டு எண்ணிக்கை
குறைத்துக் கொள்வதில் தவறும் இல்லை.. மேலும் பொது எதிரி தான் முக்கியம் என்றால், தொகுதி
எண்ணிக்கையை அனைவருக்கும் கூடுதலாக பகிர்ந்து பொது எதிரியை வீழ்த்த வேண்டுமே தவிர,
திமுக தன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து, கூட்டணி கட்சிகளின் கழுத்தில்
கால் வைத்து மிதித்து பொது எதிரியை வீழ்த்த எண்ணக்கூடாது.
இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு திமுகவில் மதிப்பு கொடுக்கிறார்கள்.
கடந்த 2021 தேர்தலில் டிடிவி தினகரனுடன் சேர்ந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும்
0.43% வாக்குகள் வாங்கி ஒரு சதவீதத்தை கூட முழுமை பெறாத தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்பி
கொடுக்கிறார்கள். அதே வழியில் காங்கிரஸையும் அணுகினால் எப்படி?’’ என்று கேட்கிறார்கள்.
சரியான கேள்வி. இன்றைய தினம் 28 + 1 ராஜ்ய சபா சீட் என காங்கிரஸ்
பேரம் முடிவுக்குவரும் என்று சொல்லப்படுகிறது. நாளை ராஜ்யசபா எம்.பி. வேட்புமனு தாக்கல்
செய்ய வேண்டிய நாள் என்பதால் காங்கிரஸ் பஞ்சாயத்து இன்று முடிவுக்கு வருகிறது. அதனால்தான்
இத்தனை நாளும் சண்டைக்கோழி போன்று சீறிக்கொண்டிருந்த மாணிக்கம் தாகூர், கட்சியின் முடிவே
பெரிது என்று மண்டி போட்டிருக்கிறார்.
